கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் குப்பம் பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவஸ்ரீ என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சரண்யா தனது குழந்தைகளுடன் வடிவுடையம்மன் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்ட பிறகு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவர்கள் எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சரண்யா ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் சரண்யா மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கிருத்தீஸ், அவருடன் வந்த சூர்யா, சக்திகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.