தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று காசி விஸ்வநாத சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி -அம்பாள் காலை, மாலை இருவேளை, சிறப்பு பூஜை மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெற்றன. இதனால் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
நேற்று காலை இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி -அம்பாள் காலை 6 மணிக்கு தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்ற பின்பு காலை 9:30 மணிக்கு சுவாமி தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பக்தி கோஷத்துடன் மேளதாளங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-35 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
இதையடுத்து அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு 4 ரத வீதிகளிலும் சுற்றி 10:45 மணிக்கு நிலையத்தை அடைந்த பின்பு பக்தர்கள் பக்தி கோஷமிட்டு கரவொலி எழுப்பினர். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள், கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் கோமதி, நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செந்தில்குமார், கோவில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.