தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது கடந்த வருடம் இறுதியில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் விதிமுறைகளை மாற்றி அமைத்தது. இதற்கு முன்னதாக தமிழக அரசின் பணிகளில் அதிகளவில் வெளிமாநிலத்தவர் சேர்க்கப்படும் நிலை இருந்தது. இது குறித்து எழுந்த புகார்களின்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஆங்கில மொழி தேர்வு நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்மொழி தேர்வு தகுதி தேர்வாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தேர்வர்கள் தமிழ் மொழித்தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவு பகுதி விடைத்தாள் மதிப்பிடப்படும். இதன் காரணமாக தமிழ் மொழியை அறிந்தவர்களும், சொந்த மாநிலத்தவர்களும் மட்டுமே அரசு பணிகளில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் 32 வகையான தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்க்கான அதிகாரபூர்வ தகவல் முன்பே வெளியிடப்பட்டது.
அவ்வாறு அறிவிப்பு வெளியாகிய 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி-யின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து 5,831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு மார்ச் மாதமும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்..18) சென்னை அலுவலகத்தில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும்..? என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி-யின் தலைவர் வெளியிட இருப்பதால் தேர்வர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.