சுப்பிரமணிய சுவாமி ஆலயத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை பகுதியில் சுப்பிரமணிய சுவாமி ஆலய கைங்கரிய சபா தலைவரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கான இடத்தை மீட்டுத் தர வேண்டி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் புத்தூர் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான செல்வம் என்பவர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான 214 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அபகரித்து, அதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் அதனை தனது தாயார் மலர்க்கொடி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார். அதன்பின் அந்த நிலத்தை தனது சகோதரருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானம் கொடுத்துள்ளார். இதனையடுத்து செல்வம், அவரது சகோதரர் மற்றும் அவருடைய தாய் மலர்க்கொடி ஆகிய 3 பேர் மீதும் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.