வெறிநாய்கள் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராம பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த வாரம் சின்னதுறை பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் புகுந்து நாய் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் உட்பட 3 பேரை கடித்து குதறியது. மேலும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெறி நாய்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கடிப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வெறி நாய்களை பிடிக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெறிநாய் கடிக்கு போதிய அளவு மருந்துகளை இருப்பு வைக்கவும் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.