மனிதர்களை பாதுக்காக்க பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் நேரு நகரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பனை மரங்களை பாதுகாக்க கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை அடுத்த ஆயுர்தர்மம் என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தமிழகத்தில் கட்டுமான தேவைகளுக்காக பனை மரங்கள் அதிகமாக அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் இயற்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் இது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறேன். பனைமரம் தமிழக மக்களின், மற்றும் தமிழகத்தின் அடையாளமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு தக்க சான்று திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். இது பனை ஓலையில் எழுதப்பட்டது. வேர் முதல் ஓலை வரை ஒவ்வொரு பாகமும் மனிதர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகும்.
மேலும் கடலோரப் பகுதிகளில் உள்ள பனை மரங்கள் மண்ணரிப்பைத் தடுத்து சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கும். தமிழகத்தில் மொத்தம் 5 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன அவற்றுள் 50 சதவீத பனைமரங்கள் தூத்துக்குடி இராமநாதபுரம் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ளன. சமீபகாலமாக கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சில தேவைகளுக்காகவும் பனை மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. பனை மர தோப்புகள் வீடுகளாக மாறி வருகின்றனர்.
இத்தகைய சூழலால் இயற்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். ஆகையால் பனைமரத்தை அரியவகை மரமாக அறிவித்து அதனை பாதுகாக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் இயற்கையை வளங்களை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை மேலும் எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு அன்றாட வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்படும் பனை மரங்களை அதிக அளவில் நடவேண்டியதும் தமிழக அரசின் கடமை என்று கூறி மரம் நட உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.