குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின் வாங்கப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே போராட்டக்காரர்களின் வாதமாக உள்ளது.
இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து பேசியதாவது, எதிர்க்கட்சிகள் ஓரணியில் வந்தாலும் குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின் வாங்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தாங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்கள், பொய்களை பரப்பிக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அசோக் கெல்லாட் ஜி (ராஜஸ்தான் முதல்வர்), இதை எதிர்ப்பதற்கு பதிலாக (குடியுரிமை திருத்தச் சட்டம்) கோட்டாவில் தினமும் இறக்கும் குழந்தைகள் மீது முதலில் கவனம் செலுத்துங்கள், கொஞ்சம் அக்கறை காட்டுங்கள், தாய்மார்கள் உங்களை சபிக்கிறார்கள் என்றும் அதிரடியாக பேசினார்.