தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் பணியில் 90 சதத்திற்கும் மேல் அரசுப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் இருப்பதனாலும் ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருந்தார்கள்.
ஆனால் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில் மீண்டும் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பள்ளி திறப்பை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர் தரப்பில் பள்ளிக் கல்வித்துறையிடம் முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து வருகின்ற 6_ஆம் தேதி திங்கள் கிழமை பள்ளி திறக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும். இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.