மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மூதாட்டியின் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் காயமடைந்த நாகமணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் தனது வீட்டில் குடியிருக்கும் யாரோ ஒருவர்தான் தன்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றதாக மூதாட்டி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ராஜமங்கலம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 3000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.