டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை.
இதையடுத்து தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் 5,831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும்..? என்பது குறித்த முழு விவரங்களையும் இன்று ( பிப்.18 ) பிற்பகல் 12 மணிக்கு அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும். இதற்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம். மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்..