தமிழகம் முழுவதும் நாளை சென்னை, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். கடந்த சில நாட்களாக தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கி வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு பணிகளில் 5 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி அருகே கழிஞ்சூர் என்ற பகுதியில் உள்ள பழமையான முனீஸ்வரன் கோவிலில் உள்ள முனீஸ்வர சுவாமி கையில் கத்தி ஒன்று வைக்கப்பட்திருந்துள்ளது. இந்த கத்தியை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். மேலும் அந்த சிலையின் மீது தவறான வார்த்தைகளை எழுதி வைத்ததோடு மட்டுமல்லாமல் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் வேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து இந்த சம்பவத்தை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை தேர்தல் நடக்க உள்ள சமயத்தில் சிலையிலிருந்து கத்தியை எடுத்ததோடு மட்டுமல்லாமல் அதன் மீது உதயசூரியன் சின்னத்தை வரைந்து விட்டு சென்றதால் ஏதேனும் சதித் திட்டமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.