Categories
அரசியல்

இது எந்த விதத்தில் நியாயம்?…. தேர்தலை புறக்கணிக்கும் பொதுமக்கள்…. நெல்லையில் பெரும் பரபரப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நெல்லை மாநகராட்சி ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் தலைமையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி மற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நெல்லை மாநகராட்சியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என மொத்தம் 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியில் வார்டு எண் 1-க்கு உட்பட்ட சத்திரம்புதுகுளத்தில் உள்ள சித்திவிநாயகர் செந்தமிழ் வித்யா சாலா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 283 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது அந்தப் பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 6-க்கு மாற்றப்பட்டு வாக்கு சாவடி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சத்திரம்புதுகுளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் மாநகராட்சி தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரிடம் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது, “வாக்குச்சாவடி மாற்றப்பட்டது தொடர்பில் எங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வாக்கு சாவடி சீட்டு வழங்கப்பட்டபோது தான் இது குறித்து நாங்கள் அறிந்தோம். மேலும் இப்பகுதியில் 800-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதி 1976-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில் பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டது.

அன்று தொடங்கி இன்று வரை நாங்கள் சத்திரம்புதுகுளம் பகுதியில் உள்ள சித்திவிநாயகர் செந்தமிழ் வித்யா பள்ளியில் தான் ஓட்டு போட்டு வருகிறோம். ஆனால் தற்போது வேறு இடத்திற்கு வாக்குச்சாவடி மாற்றப்பட்டுள்ளதால் இங்குள்ள வயதானவர்கள், விவசாய கூலி மக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தாங்கள் அளித்த புகார் மனு மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |