அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அ.ம.மு.க வேட்பாளரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தேர்தலில் பா.ஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதே வார்டில் அ.ம.மு.க சார்பில் பிரபாகரன் என்பவரின் மனைவியான சன்மதி போட்டியிடுகிறார்.இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரபாகரன் மற்றும் அவரது உறவினரான நிதிஷ் குமார் ஆகியோர் கடந்த 7-ஆம் தேதி ராணி சென்ற கார் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிதீஷ் குமார் மற்றும் பிரபாகரனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பிரபாகரன் முன் ஜாமீன் பெற்று வெளியே இருந்துள்ளார். இந்நிலையில் கொடைரோடு சுங்க சாவடி அருகில் வைத்து பிரபாகரன் கருப்புசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கருப்புசாமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.