மோட்டார் சைக்கிளின் சக்கரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்.என்.புரம் பகுதியில் லாரி அதிபரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வம் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு தூங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார். அதன்பின் எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம நபர்கள் அதை திருட முடியாமல் சக்கரத்தை மட்டும் கழட்டி சென்றது விநோதமாக தெரிந்தது.
இது பற்றி செல்வம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து இருசக்கர வாகன சக்கரத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் நூதன முறையில் திருடி வருவது வாகன ஓட்டிகளுக்கு இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.