தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அ.தி.மு.க பிரமுகரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான முனிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபேட்டை பேரூராட்சியின் 15-வது வார்டு அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் நேற்று முன்தினம் முனிய கவுண்டர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் வேலை முடிந்து முனிய கவுண்டர் அப்பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீர் முனிய கவுண்டரை இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் முனிய கவுண்டரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் நேற்று மாலை வரை அவர் கிடைக்கவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.