கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக குனியாமுத்தூர் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளைப் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, குனியமுத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் பல காலங்களாக வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது. இவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோவை மத்திய மண்டலச் செயலாளர் என்பதும் தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே, பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காவல் துறை கைது செய்த சிராஜுதீனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.