மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் சுகுமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டிற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மின்கம்பியில் இருந்து நெருப்பு பொறி வருவதை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் சுகுமார் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி தென்னந்தோப்பிற்கு சென்றனர்.
அப்போது மின்கம்பியில் தென்னை மட்டை ஒன்று உரசி கொண்டிருந்த நிலையில் அந்த மின்சாரம் சுகுமார் மீது பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சுகுமாரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சுகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.