கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்திய பெண்கள் சுமார் 2156 பேர் வெளி நாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அலையலையாக கொரோனா தொடர்ந்து வந்தாலும் அயல்நாட்டு மோகம் என்பது நம் ஊரில் குறைந்தபாடு கிடையாது. வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் சமீபத்தில் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்வருமான கோவிந்தன் நம்பூதிரி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்,வெளியான தகவல் தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.
இந்திய வெளியுறவுத் துறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்திய பெண்கள் சுமார் 2156 பேர் வெளிநாட்டில் தங்கள் கணவனால் கைவிடப்பட்டு இருப்பதும் மற்றும் இது தொடர்பான வழக்குகள் நடைபெறுவறுவதாகவும் தெரியவந்தது. அதிலும் அதிகபட்சமாக அமெரிக்காவில் 615 வழக்குகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 586 வழக்குகளும், சிங்கப்பூரில் 237 வழக்குகளும், சவுதி அரேபியாவில் 119 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் 104 வழக்குகளும், ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகளும், குவைத்தில் 111 வழக்குகளும், கனடாவில் 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்திய சமுதாய நல நிதி சார்பில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மனைவிகளுக்கு, இந்திய தூதரகங்கள் மூலம் ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர்களுக்கு நிதி சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வெளிநாடுகளின் திருமணச் சட்டப்படி வழக்குகளை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கான நடைமுறை தீர்வை கொண்டுவர வேண்டியது முக்கியம் என்ற நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தையில் இது குறித்தும் இனி அதிகம் பேச வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து வருகின்றன.