அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னூர் கிராமத்தில் சின்னுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னுபாண்டி குமரெட்டியபுரம் பகுதியில் உள்ள கோவிலில் நடைபெறும் பத்தாம் திருவிழாவை பார்ப்பதற்காக துரைச்சாமிபுரம் கிராமத்திலிருந்து இரவில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சின்னுபாண்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னுபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதியில் விவசாய வேலைக்கு சென்றவர்கள் இதுகுறித்து காடல்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னுபாண்டியின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னுபாண்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.