தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்தது. அந்த வகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கி கொண்டிருப்பதால் இந்த கலந்தாய்வை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் பிப்ரவரி25ம் தேதியில் நடைபெற இருந்த கலந்தாய்வு 24ஆம் தேதிக்கும், மார்ச் 4ம் தேதி அன்று உள்ள கலந்தாய்வு பிப்ரவரி 25ஆம் தேதிக்கும், மார்ச் 5ம் தேதி கலந்தாய்வு பிப்ரவரி 28ம் தேதிக்கும் மற்றும் மார்ச் 7ஆம் தேதி கலந்தாய்வு மார்ச் 2ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது.
இதில் பிப்ரவரி 16, 17ஆம் தேதிகளில் உள்ள கலந்தாய்வில் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்..16 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் “எமிஸ்” இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் பிரச்சனையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சர்வர் பிரச்சனை முடிந்த பின் நேற்று முன்தினம் (பிப்..17) மீண்டும் கலந்தாய்வு தொடங்கப்பட்டது. தற்போது இன்று (பிப்…19) ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் இந்த கலந்தாய்வு பிப்ரவரி 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.