தொழிலாளியை உறவினர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிவகுமார் தனது உறவினரான கோபிநாத் என்பவருடன் அமர்ந்து மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபிநாத்தின் தாயாரை சிவகுமார் அவதூறாக பேசியுள்ளார். இதனை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் சிவகுமாரின் வீட்டிற்கு சென்ற கோபிநாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே சிவகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபிநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.