கடற்கரை பூங்காவில் சலவைத் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆயக்காரன்புலத்தில் சலவைத் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேத்தாக்குடி தெற்கு கீழவெளி பகுதியிலுள்ள தனது மகள் வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணியன் கடைவீதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கடற்கரை பூங்காவில் அவர் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து சுப்பிரமணியனின் மனைவி கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.