தமிழகத்தில் இன்று ( பிப்ரவரி 19 ) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இதுகுறித்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் இன்று ( பிப்.19 ) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ( தற்காலிக பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் ) இன்று பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மாநகர போக்குவரத்து கழகம் ஒரு பொதுசேவை நிறுவனம் என்பதால் அந்தந்த கிளை மேலாளர்களிடம் வாக்களிக்க தகுதி உள்ள பணியாளர்கள் முன்கூட்டியே தெரிவித்து வாக்களிக்க செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்து பொதுசேவை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.