கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லியாம்பாளையம் புதூர் பகுதியில் வசித்து வரும் குமாரசாமியின் மனைவி குழந்தாய்(80) கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது கிழவிக்காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே குழந்தாயியின் காலணி மற்றும் ஊன்று கோல் கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பார்த்த பொது மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அப்போது மூதாட்டியின் கண்கள் துணியால் கட்டியும், இடுப்பில் தண்ணீர் இறைக்கும் வாளியும் கட்டப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.