தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சரகத்திற்குட்பட்ட 4 மலைகிராம மக்கள் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் உற்சாகமாக தங்களது வாக்கைச் செலுத்தி வருகின்றனர். திருமூர்த்திமலை, குருமலை, மேல் குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய 4 மலைகிராம மக்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு முன் வாக்களித்து இருந்தாலும் கூட, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தது இதுவே முதன் முறையாகும்.