தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
இதையடுத்து வாக்களித்த பிறகு பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, மத்தியில் உள்ள ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு பணம், கொலுசு, டிபன் பாக்ஸில் மூக்குத்தி வைத்து கொடுக்கின்றனர். இதனிடையில் நியாயமான தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும். கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை” என்று தெரிவித்தார்.