வாகனம் மோதி அடிப்பட்ட மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வெங்கிட்டாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சாலையில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மானின் தலை மற்றும் கை கால்களில் பலத்த அடிபட்டு சாலை ஓரமாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர்கள் முத்துசெல்வி, அர்ஜுனன் ஆகியோர் காயம்பட்ட மானுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிகிச்சை பெற்ற மானை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுவதாவது, உடுமலை அருகிலுள்ள மலைப்பகுதியில் மான்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள தண்ணீர் வறண்டு வருவதால் குடிநீர் தேடி வந்த மான் வழித்தவறி சாலையோரமாக வந்திருக்கலாம். அந்த மானின் முன்னங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து மானின் காயம் குணமடைந்த பிறகு கோதபாளையம் பகுதியில் மான்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று விடப்படும் என தெரிவித்துள்ளனர்.