வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ அம்பிகா என்ற மனைவி உள்ளார். ராஜா பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விளாங்குடியில் ஒரு பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வெளியே சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் வீட்டின் கதவை திறக்கும் பொழுது உள்பக்கம் தாழ்பாள் போட்டிருந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த தம்பதிகள் ஜன்னல் வழியே வீட்டிற்குள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு வழியாக மர்மநபர்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடுவதை பார்த்துள்ளனர்.
தம்பதியினர் இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் 82 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து கயர்லாபாத் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.