ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹோட்டல் ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் உமா தேங்காப்பட்டணத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு நேரத்தில் உமா ஐயப்பனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் அச்சத்தில் உமா தனது வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார்.
அப்போது ஐயப்பன் படுக்கை அறையில் பிணமாக தொங்கியதை கண்டு உமா அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஐயப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.