தமிழக வீரர் ஷாருக்கான் டி20 போட்டியில் விளையாடுவது போல் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் ரஞ்சி டிராபி தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் குரூப் ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, டெல்லி அணிகள் மோதிக் கொள்கின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் யாஷ் தூல் 113 (150), லலித் யாதவ் 177 (287), ஜான்டி சிந்து 71 (179) ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுத்ததால், இந்த அணி முதல் இன்னிங்ஸில் 452/10 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழக அணி பௌலர் முகமது 4/75 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் ஓபனர் கௌசிக் காந்தி 55( 135) ரன்கள் அடித்து அசத்தினார். அவரை அடுத்து பாபா அபரஜித் 0(7), சாய் கிஷோர் 11 (21), கேப்டன் விஜய்சங்கர் 5 (17) போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பாபா இந்திரஜித், ஷாருக்கான் இருவரும் சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். இதில் 100, 200, 250 என ரன்கள் குவித்து டெல்லி அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதில் இந்திரஜித் 117 (149) ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்துள்ளார். இவரை அடுத்து விளையாடிய ஷாருக்கான் 8 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் உட்பட 150+ ரன்கள் சேர்த்து விறுவிறுப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஷாருக்கான் 162 (125), என் ஜெகதீசன் 38 (51) போன்ற வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அணி 432/6 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் பின்தங்கியுள்ளது. மேலும் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.