குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே போராட்டக்காரர்களின் வாதமாக உள்ளது. தற்போது வரை போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்த போது, குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது, நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. இரு தரப்பிலும் தீவிரமான கருத்துக்களைக் கொண்ட ஒன்றைப் பற்றி பேச விரும்பவில்லை. என்ன அர்த்தம் மற்றும் என்ன நடக்கிறது என்பது பற்றிய மொத்த தகவல்களும் அறிவும் எனக்கு இருக்க வேண்டும். பின்னர் அது குறித்து எனது கருத்தை தெரிவிக்க பொறுப்பு இருக்கிறது. ஆகவே குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.