செடி-கொடிகளுக்கு வைத்த தீ திடீரென கரும்பு தோட்டத்திற்குள் பரவியதால் 2 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள சடையால்பட்டி பகுதியில் சுமார் 5 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்கு அருகே இருந்த தேவையில்லாத செடி கொடிகளை வெட்டி அப்பகுதியினர் தீ வைத்தனர். அப்போது தீ திடீரென அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்குள் பற்றியது. மேலும் மள மளவென தீ பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1/2 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர். ஆனாலும் ராமகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோரின் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த கரும்புகள் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் கரும்பு தோட்டம் அருகே இருந்த பெட்ரோல் நிலையத்தில் தீ பரவாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.