பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பெயரில் அவருடைய பாதுகாப்பு அல்லது பெற்றோர் குறைந்தபட்ச தொகையாக ரூ.1,000 செலுத்தி வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் பெண் குழந்தை பெயரில் கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் வயது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கலாம்.
மேலும் முகவரி சான்று, அடையாள சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலர் படம், குழந்தையின் படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை கணக்கு தொடர்வதற்கு அவசியமாகும். இந்த திட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு சேமிப்பு தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு தொகையில் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக 50 சதவீதம் வைப்பு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வகையில் பெண் குழந்தைக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் அல்லது பெண் குழந்தையின் திருமணத்தின் போது முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். ஒருவர் ரூ.1,000 மாதம் சேமித்து வைத்தால் அதன் மூலம் ரூ.5.09 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும். இந்த திட்டத்தில் வரி சலுகைகள் முதலீடு செய்வோருக்கு வழங்கப்படும். அதாவது வட்டி வருமானம், முதலீட்டு தொகை, மெச்சூரிட்டி உள்ளிட்ட மூன்றுக்கும் இந்த திட்டத்தில் வருமான வரிவிலக்கு கிடைக்கிறது.