நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நேற்று தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலானது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் மிகவும் குறைந்தளவு வாக்கு சதவீதம் சென்னையில்தான் பதிவானது. சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதுவரை சென்னையில் 50 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவு நடந்ததில்லை.
சென்ற 2011ம் வருடம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 52.67 சதவீதமும் அதே வருடம் 2011 ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 52.67 சதவீதமும் 2021 ஆம் வருடம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீத வாக்குகள் பதிவானது. ஆனால் நேற்று நடந்த நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலில் 43.59 சதவீதம்தான் பதிவானது. இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆபத்தானது ஏதும் நடக்கவில்லை. படித்தவர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். நேற்று நடந்த தேர்தலில் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு வெறுப்பு காரணமல்ல. பெரும்பாலானோர் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.