தமிழகம் முழுவதுமுள்ள பதட்டமான 5000 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு இணையத்தின் வாயிலாக மாநில தேர்தல் கமிஷனில் 30 அலுவலர்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலுள்ள மொத்த 25,735 ஓட்டுச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 5000 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு மாநில தேர்தல் கமிஷனில் 30 அலுவலர்கள் தலைமையில் இணையத்தின் வாயிலாக நேரடியாக வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனரான பழனிக்குமார் கூறியதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு மற்றும் மயிலாடுதுறை நகராட்சி 19-வார்டு ஆகியவற்றில் நேற்று தேர்தல் நடைபெறவில்லை.
அதேபோல் தஞ்சாவூர் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 ஆவது வார்டிலும், ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சி 2 ஆவது வார்டிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 ஆவது வார்டிலும் நேற்று தேர்தல் நடைபெறவில்லை. இந்தப் பகுதிகளில் எல்லாம் மார்ச் 4-ஆம் தேதிக்குப் பின் தேர்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 1195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரும் காலங்களில் தங்களது ஓட்டை யாருக்கும் போட விரும்பாத நபர்கள் படிவம் 21 ல் தங்களது வாக்கை பதிவு செய்யும் படியான இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.