பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் பூதகணங்கள் போல வித்தியாசமாக வேடமணிந்து நடனமாடியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த திருவிழாவை சைவ நாயன்மார்களான சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கோவிலுக்கு வரும் சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு அளிப்பதற்காக இறைவனிடம் இவர்கள் உதவி கேட்டுள்ளனர். இவர்களின் பக்தியை ஏற்றுக்கொண்ட இறைவன் குண்டையூர் கிழாரிடமிருந்து பூதகணங்கள் நெல்லை பெற்று சுந்தரர் மற்றும் பரவை நாச்சியாரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கொண்டாடும் விதமாக பங்குனி திருவிழாவிற்கு முன்பாக பூத நெல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பரவை நாச்சியார் கோவிலில் சுந்தரர் மற்றும் பரவை நாச்சியார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு பல்லக்கில் சுவாமிகள் எடுத்து வரப்பட்டுள்ளனர். மேலும் பூதகணங்களை நினைவுபடுத்தும் விதமாக பக்தர்கள் பூதகணங்கள் போல் வேடமணிந்து நடனம் ஆடியுள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.