மலைவாழ் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாக்குச்சாவடியில் தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரம் நகராட்சியில் 21-வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் இஞ்சிகுழி கிராமத்தில் வசிக்கும் 20 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் ஊரிலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்துள்ளனர். அதன் பிறகு 8 கிலோமீட்டர் படகில் பயணித்து இரவு நேரத்தில் காரையாறு வந்தனர்.
இதனையடுத்து நேற்று காலை காரையாறு வாக்குச்சாவடியில் மலைவாழ் மக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டுள்ளனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும் போது, 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஓட்டு போட வந்துள்ளோம். வனத்துறையினர் சார்பில் படகு வசதி செய்து கொடுத்தால் அத்தியாவசிய தேவைகளுக்கு காரையாருக்கு வந்து செல்ல உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.