பா.ஜ கட்சி நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் பகுதியில் இருக்கும் வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது சடலமாக மீட்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் பா.ஜ.க மாவட்ட வர்த்தக அணி துணை தலைவராக இருக்கிறார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி செந்தில்குமார் ஈரோட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறியுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு செந்தில்குமார் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2 இரண்டு ஆண்டுகளாக பழனியில் வசிக்கும் இளம்பெண்ணும், செந்தில்குமாரும் முகநூல் மூலமாக பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் செந்தில்குமாரை கண்டித்துள்ளனர். கடந்த 14-ஆம் தேதி செந்தில்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ஈரோட்டில் இருந்து 7 பேரை திருநெல்வேலிக்கு வாடகை காரில் அழைத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய செந்தில்குமார் விடுதியில் தங்கியிருந்த 7 பேரையும் தனது சொகுசு காரில் அழைத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது செந்தில்குமாரின் நண்பரான சீனிவாசன் என்பவரும் உடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் கயத்தாறு அருகில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் 7 பேரும் அரிவாளை காட்டி சீனிவாசனை காரிலிருந்து இறக்கி விட்டு செந்தில்குமாரை கடத்தி சென்றுள்ளனர். அதன்பிறகு மர்ம நபர்கள் செந்தில்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலில் கல்லை கட்டி வெள்ளநீர் கால்வாயில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இளம் பெண்ணின் உறவினர்கள் செந்தில்குமாரை கொலை செய்தனரா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.