மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பாய்லர் வெடித்து ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த இரண்டு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று நபர் காயமடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தை சார்ந்த அலி உசேன் சொந்தமாக பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் நடத்தி வருகின்றார். இத்தொழிற்சாலையில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் இறால் பவுடர் தீவனம் தயாரிக்கப்படுகின்றது. இத்தொழிற்சாலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாய்லர் வெடித்து பயங்கரமாக விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த அருண்ஓரானா வயது 25, பல்ஜித்ஓரான் வயது 20, இவர்கள் இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப்பார்த்த சக பணியாளர்கள் படுகாயமடைந்த ரகுபதி வயது 53, பந்தநல்லூர் மாரிதாஸ் வயது 45, திருமுல்லைவாசல் ஜாவித் வயது 29 உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.