திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது மகளைக் காணவில்லை எனத் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, ரவி என்கிற விருமாண்டியை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள், போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள், பாதிக்கப்பட்ட பெண் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பதால் அதற்கு ஐந்தாண்டுகள் என மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.