இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 5ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடக்கை சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் மருத்துவர் நித்தின் படேல் அவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.
இது குறித்து படேல் கூறுகையில், விராட் கோலிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் இன்று நடைபெறும் போட்டியில் இவர் பங்கேற்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 போட்டியானது 22 மாதங்களுக்கு பிறகு தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி காயமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.