இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் காலனியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும் அக்ஷயா(7) பிரகதி(3) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் களங்காணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் பாச்சல் மேம்பாலத்தில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தமிழ்ச்செல்வன் மற்றும் 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வனும் உயிரிழந்துள்ளார். தற்போது அக்ஷயா, பிரகதி ஆகிய இருவரும் சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.