கோவையில் 15 ARREAR வைத்திருந்ததால் மனஉளைச்சல் அடைந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசேகரன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகனை கோயம்புத்தூர் மாவட்டம் பீலமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். கமலேஷ் தற்பொழுது 4 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் நான்கு வருடங்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் கல்லூரிக்கு விடுதியில் இருந்து சக நண்பர்கள் புறப்பட கமலேஸ்வரன் அறையிலேயே தங்கினார். இதை பார்த்த நண்பர்கள் கல்லூரிக்கு வா என்று அழைத்தபோதும் பொறுமையாக வருகிறேன் என்று கூறிவிட்டு அறையிலேயே இருந்து விட்டார். கல்லூரிக்கு வெகுமணி நேரம் ஆகியும் கமலேஷ் வராததால் இடைவேளையின் பொழுது நண்பர்கள் அறையில் சென்று பார்த்தபொழுது கமலேஷ் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பீலமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்டமாக மாணவன் 15 ARREAR வைத்திருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனாலேயே அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.