புதுக்கோட்டையில் தமிழர்களின் படைப்புகளை கல்யாண சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“தமிழினி” என்ற வாட்ஸ் அப் குழு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினமும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் போன்றவை நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்த வாட்ஸ் அப் குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “தமிழினி” வாட்ஸ்அப் குழு ஒருங்கிணைப்பாளரான டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் 9 மாட்டு வண்டிகளில் கல்யாண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.
இதிலிருந்த ஒவ்வொரு வண்டியிலும் திருவள்ளுவர், அவ்வையார், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற தமிழறிஞர்கள் படங்கள் மற்றும் அவரது படைப்புகள் ஏற்றிகொண்டுவரப்பட்டது. இவற்றைக் கொண்டு வந்து மண்டப வாசலில் இறங்கி மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் தட்டுகளில் வைத்து சீர்வரிசை அளிக்கப்பட்டது. இவ்வாறு திருமண விழாவில் அனைத்து தமிழறிஞர்கள் போற்றப்பட்டது அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.