பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்களை வரலாற்று குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமந்தமலை செல்லும் வழியில் இருக்கும் ராமாயண பள்ளியில் அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 மற்றும் 3-வது நடுகற்களில் அழகான வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது வைக்கப்பட்டிருந்த நடுகல்லில் வண்ணம் தீட்டப்படவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும்போது, போரில் இறந்த வீரர்களின் நினைவாக நடுகல் வைக்கப்படுகிறது. இறப்புக்கு பிறகு வீரனின் 2 மனைவிகளும் அவனோடு உடன்கட்டை ஏறி இறந்துள்ளனர். 2-வது இருப்பது புலிகுத்திபட்டான் நடுக்கல் ஆகும். அதாவது வீரன் புலியோடு சண்டை யிட்டு இறந்துவிடுகிறான். அதன்பிறகு புலியும் இறந்துவிடுகிறது. இந்த நடுகல்லில் 2 வேட்டை நாய்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் நாய்களை வேட்டைக்கு பயன்படுத்தியது இந்த நடுகல் மூலமாக உறுதியாகிறது. 3-வது நடுகல் பூசலில் இறந்த வீரனுக்காக வைக்கப்பட்டது ஆகும். அந்த வீரனின் 2 மனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளனர். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 நடுக்கற்களிலும் இரண்டு கிளிகள் பொறிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்திருந்த இந்த நடுகற்களை ஊர்மக்கள் எடுத்து வைத்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.