அடிக்கடி விபத்து நடைபெறும் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லணை சாலையில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திருவளர்சோலை பனையபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதிவிட்டது. இதனால் படுகாயமடைந்த வாலிபர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் லாரியை பின்தொடர்ந்து வந்த காரும் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த 4 பேரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருவளர்சோலை பனையபுரம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.