மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராசபாளையம் வெட்டுக்காட்டூர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலை புதூரில் பேக்கரி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் வெட்டுக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை பார்த்ததும் அச்சத்தில் லாரி ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அறிந்த பிரகாஷின் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஒன்று திரண்டனர். இதனை அடுத்து பிரகாஷின் உடலுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது கமிட்டி ரோடு குறுகலாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே குறுகலான இருக்கும் இந்த சாலையை விரிவாக்கம் செய்த பிறகே கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.