தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இருப்பினும் சில மையங்களில் சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது. இதனிடையில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று(பிப்..22) வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..