உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 5 தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் 12 முதல் 18 வயதினருக்கு ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியும், பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தவும் அனுமதி வழங்கியது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் 12- 18 வயதிற்கு உட்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.