விவசாயின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை அருகில் கணபதிபுரம் கிராமத்தில் விவசாயியான கோகிலவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் இடப்பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோகிலவாசனை மர்மநபர்கள் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த கோகிலவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கோகிலவாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் கோகிலவாசனை கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி மருத்துவமனையின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளும் இவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் கோகிலவாசனை கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்த பின்னரே அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோகிலவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின் அவர்களது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்துள்ளனர்.